திங்கள், ஏப்ரல் 11, 2011

ஹஸாரே உண்ணாவிரதம்: காரணத்திலும் தெளிவில்லை; காரியத்திலும் ஜெயமில்லை


தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு ,

நல்ல அலசல்.


தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவின் சந்தேகங்கள் உண்மையானவை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. (காண்க: அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்)


எந்த ஒரு செயலும் நியாயமானது என்பதற்கான காரண காரியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும். எந்த ஒரு செயலின் பின்புலத்திலும் அதனை மேற்கொள்பவரின் நோக்கங்கள் வெளிப்பட்டே தீரும். தில்லியில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் துவக்கியபோது, அவருக்கு அருகில் வீற்றிருந்தவர்களைக் கண்டபோதே இது உருப்படாது என்பது தெளிவாகிவிட்டது. சுவாமி அக்னிவேஷ் யாரென்று தெரியுமா? அவரைப் பற்றித் தெரியாதவர்கள், நமது ஊர் மதுரை ஆதீனத்தை ஒப்பிட்டுக் கொள்ளலாம். சந்தீப் பாண்டே யாரென்று தெரியுமா? நம் ஊர் எஸ்.வி.ராஜதுரையை ஒப்பிட்டுக் கொள்ளலாம். நற்காரியங்கள் உள்நோக்கங்களுடன் செயல்படுபவர்களிடமிருந்து வெளிவருவதில்லை. தன்னைச் சுற்றிலும் இத்தகைய நம்பகத்தன்மையற்ற பிரமுகர்களை வைத்துக் கொண்டு ஹஸாரே உண்ணாவிரதம் இருந்தது, தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது கேள்விக்குறி.


அன்னா ஹஸாரே பொதுவாழ்வில் மாறுதலை ஏற்படுத்த காந்தீயத்தைக் கடைபிடித்தவர் என்று முழங்கும் எந்த ஊடகமும், அவர் 1975 ல் ‘ராலேகான் சிந்தி’ என்ற கிராமத்தில் நிகழ்த்திய புரட்சிகரமான மாற்றத்தை சொல்லவில்லை. இன்னும் பலருக்கு அவர் அந்த கிராமத்தில் நிகழ்த்திய மகத்தான மாற்றங்கள் தெரியாது. அதன் பிறகு மராட்டிய அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்ததும் அவரது குரல் அம்மாநிலத்தில் எடுபடாமல் போனதும் பலருக்குத் தெரியாது. அவரது சரத் பவார் மீதான தனிப்பட்ட வெறுப்பே இந்த உண்ணாவிரத் நாடகத்தின் இறுதியில் வெற்றி கண்டது. அதற்காகவே, ‘சோனியாஜியும் லோக்பால் குழுவில் இடம்பெற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஹஸாரே. ஊழலை ஒழிக்க இதைவிட நல்ல வேறு வழியை யாரும் கண்டுபிடிக்க முடியாது. கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி!


ஊழலுக்கு எதிரான லோக்பால் குழுவில் அரசியல் சார்பற்ற என்ஜிஓக்களும் அரசுப் பிரதிநிதிகளும் தான் இருக்க வேண்டும் என்ற வரையறையே முதலில் தவறானது. பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், இடதுசாரி கட்சிகளின் தலைவரும் ஏன் இக்குழுவில்; இடம்பெறக் கூடாது? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் அரசுடன் போராடி தோல்வியுற்றாலும் மக்களின் மனசாட்சியாகத் திகழ்ந்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அல்லவா? பாஜக பிரமுகர் என்பதால் அவர் லோக்பாலில் சேர்க்கப்படக் கூடாதா? தன்மீதான ஊழல் (1990 - ஹவாலா மோசடி வழக்கு) குற்றச்சாட்டிற்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததுடன் நிரபராதி என்று நிரூபிக்கப்படும்வரை எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று சபதம் செய்து வெற்றி கண்ட அத்வானி இக்குழுவில் ஏன் இடம் பெறக் கூடாது? மத்திய அரசின் தொடர் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடும் பரதனோ, து.ராஜாவோ ஏன் இக்குழுவில் இடம் பெறக் கூடாது?


லோக்பால் உறுப்பினர்களை முடிவு செய்ய ஹஸாரே உண்ணாவிரதத்தால் முடியும் என்றால் அவர் ஏன் இதனை முன்வைக்கவில்லை? நோபல் பரிசும் மகசேசே விருதும் தான் நமது நாட்டின் பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கான உரைகல்லா? எனில், நோபல் பரிசு பெறாத மகாத்மா காந்தியை முன்னிறுத்தி உண்ணாவிரதம் இருப்பதே கேலிக்குரியதாக இல்லையா? தனது மேடையில் அரசியல்வாதிகள் யாரும் ஏறக் கூடாது என்று சொன்ன ஹஸாரே, அக்னிவேஷின் உள்அரசியலை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்?


ஹஸாரே நல்லவர்தான்; அவரைச் சுற்றிலும் இருப்பவர்கள் தான் சரியில்லை என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. நல்லவர் எவரும் தன்னைச் சுற்றிலும் சுயநல வியாபாரிகள் அமர்வதை அனுமதிக்க மாட்டார். தன்னைப் பயன்படுத்தி விளம்பரம் தேடும் பிரமுகர்களை அக்னிப் பிழம்பு போன்ற மாசற்றவர்களால் அனுமதிக்க முடியாது. ஹஸாரே இந்த விஷயத்தில் தோல்வி கண்டவர். லோக்பால் குழுவில் சோனியாவும் (என்.ஏ.சி- தேசிய வழிகாட்டுதல் குழு தலைவராம்) இருக்கலாம் என்று தீர்மானிக்க இவர் யார்? மன்மோகன் சிங்கையும் சரத் பவாரையும் விமர்சிக்கும் ஹஸாரே அவர்களை பின்னிருந்து இயக்குபவரை போற்றுகிறார். இது முரண்பாடு இல்லையா?


ஹஸாரே ஹிந்துவா, கிறிஸ்தவரா என்பதல்ல பிரச்னை. குமரப்பா போன்ற காந்தீயவாதி தூய கிறிஸ்தவராகவும் தேசபக்தராகவும் இருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அக்னிவேஷ் ஹிந்து என்பதால் அவரை இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. மதம் பிரச்னை அல்ல. அதனை விவாதப் பொருளாக்கி, ‘தமிழ் ஹிந்து’வின் விவாதம் மடைமாற அனுமதிக்க வேண்டாம்.

ஹஸாரேவுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நல்ல அறிமுகம் இருந்ததுண்டு. ஆயினும் அவருடன் ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து பணிபுரிய உடன் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதே நிலைமை தான் ஜெயபிரகாஷ் நாராயணன் எம்ஜென்சியை எதிர்த்து போராடக் கிளம்பியபோதும் இருந்தது. ஜெபி. இந்திராவை எதிர்த்ததைவிட சங்கத்தை கடுமையாக எதிர்த்தவர். ஆனால், தங்கள் மாசற்ற குணத்தாலும் தலைமைப் பண்பாலும் சங்க ஸ்வயம்சேவகர்கள் ஜெபியிடமும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பின்னாளில் சங்கப் பொறுப்பாளர்களே எமெர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் காலம் வந்தது. அதேபோல, இப்போதும் நிகழ்கிறது. ஹஸாரேவை நீண்ட நாட்களுக்கு சுயநலக் குழுக்கள் பிணைக்கைதியாக வைத்திருக்க முடியாது. ஆயினும் அவர் சுதந்திரமாகச் செயல்பாடாதவரை, அவரது போராட்டம் நாடகமாகவே இருக்கும்.


இன்றுள்ள சூழலில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க தகுதி இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் 'சில' கம்யூனிஸ்ட் தலைவர்களும் மட்டுமே. ஆனால், அவர்கள் இதே உண்ணாவிரதத்தை நடத்தியிருந்தால் ஊடகங்கள் இந்த அளவிற்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்காது; மட்டுமல்ல, போராடுபவர்களைப் பற்றியே விஷத்தை இதே ஊடகங்கள் கக்கி இருக்கும். ஏனெனில் தேசபக்தியுடன் செயல்படும் அரசியல்வாதிகளை நமது ஊடகங்கள் விரும்பியதில்லை. பர்கா தத்தும் ராஜ்தீப்பும் ஹஸாரேவுக்கு வாழ்த்துப்பா பாடும்போது, அவரது உண்ணாவிரதமே கேலிக்குரியதாகி விடுகிறது. அவர்கள் எந்நாளிலும் தேசபக்தர்களை புகழ்ந்ததில்லை.


இன்று நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான பேரலை மக்களின் உள்ளத்தில்- குறிப்பாக இளம் தலைமுறையினரிடம்- ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வடிகாலாக ஹஸாரே உண்ணாவிரதம் அமைந்ததால் தான் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக போராடி, அவரை கதாநாயகர் ஆக்கினார்கள். இன்றுள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அதை ஏற்க மக்கள் சித்தமாக இருக்கிறார்கள்; ஆனால், இதே ஊடகங்கள் ஹஸாரே தவிர்த்த யாரேனும் (அவரும் கூட அக்னிவேஷ், சந்தீப் பாண்டே உடன் இருந்ததால் தான் பிரசுரிக்கப்பட்டார்). உண்ணாவிரதம் இருந்திருந்தால் அதனை பிரபலப்படுத்தி இருக்காது.


மொத்தத்தில், ஹஸாரே உண்ணாவிரதம் காலத்தின் கட்டாயமாக நடந்தது. அதற்கான சிறிய பலனையும் அடைந்தது. ஆயினும் காரணத்திலும் காரியத்திலும் தெளிவில்லாத காரணத்தால், ஹஸாரே உண்ணாவிரதம் ஒரு தற்காலிக எழுச்சியை ஏற்படுத்தியதுடன் நிறைவடைந்துவிட்டது. நல்ல வேளை, இந்த உண்ணாவிரதத்தை முடித்துவைக்க ஆ.ராசா திகார் சிறையிலிருந்து வெளிவரவில்லை.

- சேக்கிழான்


(தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியான கட்டுரைக்கு எனது பின்னூட்டம் இது)

.

5 கருத்துகள்:

  1. அன்புடன் வணக்கம்
    ""சோனியாஜி உறுபினராக இருந்தால் kooda கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி.""".இதில் லோக்பால் தேவை இல்லை... உங்கள் பதிவுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  2. I totally agree with your views regarding sonia and Agnivesh.
    I don't think RSS leaders or BJP leaders are different from sonia congress leaders

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவு நீங்களும் bjp ஆர்ஸ்ஸ் என்பதை காட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்டம் அளித்த நண்பர்கள் ஜோ, ஹமாரங்கா, சாக் ஆகியோருக்கு நன்றி.

    திரு ஹஸாரே அவர்களை நான் இன்று புகழ்பவர்கள் போல இப்போதுதான் அறிந்தவன் அல்ல. அவர் கிராம மறுமலர்ச்சிக்கு செய்த பணிகள் பலர் அறியாதவை. அவை குறித்து எனது தனிக் கட்டுரை விரைவில் இதே தளத்தில் வரும்.

    சோனியாவுடன் பாஜகவை என்னால் ஒப்பிட முடியவில்லை. அத்தகைய ஒப்பீடு பாஜக மீதான வெறுப்பில் எழுவது என்பதே என் கருத்து. ஹஸாரே போலவே மற்றொரு அற்புத மனிதர் கோண்டா மாநிலத்தில் மாற்றம் ஏற்படுத்தினார். அவர் நானாஜி தேஷ்முக். 60 வயதிற்கு மேல் அரசியலில் இருக்கக் கூடாது என்று சன்யாசம் வாங்கிக்கொண்ட பிரமச்சாரி அவர். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் பாஜகவின் முந்தைய வடிவான ஜனசங்கத்திலும் இருந்தவர். வாஜ்பாய்க்கு அவர் மூத்தவர். அத்தகைய பல அரிய தலைவர்கள் பற்றி அறியாத தலைமுறையினர் நாம்.

    இதை சொல்வதால், நான் ஆர்.எஸ்.எஸ்காரன் ஆகிவிடுகிறேன். உண்மை அதுவானால் தவறில்லை என்பதே என் நிலைப்பாடு. விவேகானந்த கேந்திரம் நிறுவிய ஏகநாத் ரானடே, ஆர்.எஸ்.எஸ்காரர் தான். அந்த அமைப்பு செய்யும் நற்காரியங்களை நாம் அறிந்திருக்கிறோமா? உண்மையில் நம்மிடையே ஆர்.எஸ்.எஸ் குறித்த எதிர்மறையான சித்திரமே வழங்கப்பட்டிருக்கிறது. இதே அன்னா ஹஸாரே ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தான். இப்போதும் கூட குஜராத் முதல்வர் மோடியை அவர் பாராட்டிப் பேசி இருப்பதை பத்திரிகைகளில் நீங்கள் படித்திருக்கலாம். இனி ஹஸாரேவையும் வசை பாட வேண்டியதுதான்.

    எனவே, திறந்த மனத்துடன் எனது கருத்தை பரிசீலனை செய்யுமாறு நண்பர்களை மீண்டும் வேண்டுகிறேன்.

    -சேக்கிழான்

    பதிலளிநீக்கு
  5. ஹஸாரேவையும் சுற்றி இருப்பவர்களும் RSS,BJP காரர்களே.

    பதிலளிநீக்கு